மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ள ராஜா மொகைதீன் உள்ளிட்ட தேர்வானவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தசுமார் 60 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. இதில் முக்கியமாக தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது, இந்தத் திட்டத்தின் செயல்திறனையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

