அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே, விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடமென்று இஸ்லாமிய அமைப்பினரும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. பிரச்சனைக்குரிய
அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும்
பிரச்சனைக்குரிய இடத்தில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து ஜெயங்கொண்டம் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை. இஸ்லாமியர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் சொல்லியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என நகராட்சி அலுவலர்களுடன் இஸ்லாமிய அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.