தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாலகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். காலமாகி விட்டார். இவரது மனைவி உமாராணி (53). இவர் திருவாரூரில் பொதுப்பணித்துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு வேலைக்காக சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.
அதேபோல் கடந்த 18ம் தேதி உமாராணி காலை வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்த்து கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் கல்நெக்லஸ், நான்கரை பவுன் டாலர் செயின், தோடு என மொத்தம் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உமாராணி தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.