அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார்.”
நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி
தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.45 மணிக்கு வைகை கரைக்கு வந்தார். அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் நாணயங்களால் ஆன பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாற்றப்பட்டன.
கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக காத்திருந்தனர். வீரராகவப்பெருமாள் வரவேற்க, தங்க குதிரையில் வந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் 5.59 மணிக்கு எழுந்தருளினார். பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, ’ என பக்தி பரவசததில் கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்கள் பலர் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தோல் பை துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சினர். பின்னர் மண்டகப்படியை மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு வையாழி ஆகி பின்னர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாற்றப்பட்டது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். இதனால் மதுரை பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கியது.