திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் – ரூபியாபானு என்ற தம்பதியின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன், கல்பாக்கத்தில் செயல்படும் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே இச்சிறுவன் நினைவாற்றல் மற்றும் விரைவாகப் பதிலளிக்கும் வேகம் கொண்டவனாக திகழ்ந்து வருகிறான்.
அதன் அடிப்படையில் முகமது ஷாரிக், 99 தமிழ் மலர்களின் பெயர்களை வெறும் 36 வினாடிகளில் கூறி வியக்க வைத்துள்ளான். 31 ஆத்திச்சூடிப் பாடல்கள், 70 திருக்குறள்கள் மற்றும் பாரதியார் பாடல்களை மனப்பாடமாகக் கூறுகிறான். இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், தமிழகத்தின் 38 மாவட்டங்கள் ஆகியவற்றின் பெயர்களை துல்லியமாகக் குறிப்பிடுகிறான். 24 தேசியத் தலைவர்கள் மற்றும் 16 தேசியச் சின்னங்களை அடையாளம் கண்டு சொல்கிறான்.
மேலும், தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடல்கள் மற்றும் கதைகளை சொல்லும் திறன் படைத்தவன். விலங்குகள், பறவைகள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களைப் பல மொழிகளில் வகைப்படுத்துகிறான். சிறுவனின் இந்த அரிய சாதனையைப் பாராட்டி, ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம், சிறுவன் பெயரை சமீபத்தில் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. இச்சிறுவனின் சாதனையைப் பாராட்டி, பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

