விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமலஹாசன் பேட்டி.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உயிரிழந்த மகேஸ்வரி (43 வயது) இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது “கமல் பண்பாட்டு மையம்” சார்பில் நிவாரண உதவியாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உறவினர்களிடம் வழங்கினார்.
ஊடகங்கள் வாயிலாக பல உண்மைகள் இன்று வெளிவந்துள்ளது. இது யாரையும் பாராட்டுவதற்கான நேரம் இல்லை. செந்தில் பாலாஜி உடனடியாக வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அவருடைய சொந்த ஊர், அவர் எப்படி உடனடியாக வந்தார் என்று கேள்வி எழுப்புவது தவறு.
உயிரிழந்தவர்களை எத்தனை பேர் என்று எண்ணிக்கை அளவில் பார்க்க கூடாது. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அரசும், முதல்வரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது போன்ற கூட்டங்களை ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்த வேண்டும். தவெக சார்பில் முன்னதாக அனுமதி கேட்கப்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் ஆற்றில் மக்கள் விழுந்திருந்தால், இதை விட அதிக உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
நான் பேசுவது மனிதம். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் அரசியல் பேசுவது தவறு. அடுத்தடுத்த மாதங்களில் அது குறித்து பேசலாம். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து கட்சிகளும் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சரும் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.
செந்தில்பாலாஜி வந்ததால் தான் சில உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இது அவர் ஊரு, அவர் வராமல் வேறு யார் வருவார்கள். செந்தில்பாலாஜி உணர்வு பூர்வமாக வேலை பார்த்துள்ளார். செந்தில்பாலாஜியை பாராட்டுனும். பாரட்டவில்லையென்றால் குறை சொல்ல கூடாது. விஜய்க்கு கோர்ட் தான் அட்வைஸ் செய்யனும்.
நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஈடாகாது. சார் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று போட்டி வேண்டாம். அவர்களுக்கு நீதி தான் வேண்டும். இது யாரையும் குற்றம் சொல்வதற்கான நேரமில்லை. இதில் நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
விஜய்க்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை. நான் என் சார்பில் மட்டுமே பேச வந்திருக்கிறேன். அரசியலில் என்னை விட மூத்தவர்கள் உள்ளனர். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. காலம் கடந்து அறிவுரை சொல்வதில் அர்த்தம் இல்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய வேண்டுகோள். நான் எவ்வளவு நிதி உதவி கொடுத்தேன் என்று சொல்லிக்காட்டுவது அசிங்கம்.
தவெகவினரை சாடுவதற்கான நேரம் இது இல்லை. சட்டம் ஏற்பாடு செய்து வருகிறது. கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. SIT குழு அமைக்கப்பட்டுள்ளது. நாம் விசாரிப்பதை விட SIT குழுவின் விசாரணை ஆழமாகவும், உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.