நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதில் முக்கியமான கட்டுப்பாடு, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாளும், அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கலாம் என்ற விதிமுறை பல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த கட்டுப்பாட்டுக்கு முன்னணி வீரர்கள் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக விராட் கோலி இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
குடும்பம் முக்கியம் . ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது விடுமுறை அல்ல. நீங்கள் ஒரு பெரிய நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். இந்த டிரஸ்ஸிங் அறையிலோ அல்லது இந்த சுற்றுப்பயணத்திலோ நாட்டைப் பெருமைப்படுத்தும் வாய்ப்பைப் பெறும் நபர்கள் மிகக் குறைவு. எனவே எங்களுடன் குடும்பங்கள் இல்லாததை நான் எதிர்க்கவில்லை.
குடும்பங்கள் முக்கியம் என்றாலும் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்துள்ளீர்கள். எனவே உங்களுடைய நாட்டை பெருமையடைய வைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடவேறு எதுவும் பெரியது கிடையாது. எனக்கு, அந்த நோக்கத்தையும் இலக்கையும் தவிர வேறு எந்த விஷயமும் முக்கியமானது கிடையாது என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்