தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் மற்றும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை காவல் துறையினர் மற்றும் சார் பதிவாளர் ஞானப்பிரகாசம் தலைமையிலான குழு தமிழக – கேரளா எல்லையான மதுக்கரை பைபாஸ்
சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து கடத்தல் அரிசியை மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இவர் கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு 25 டன் டன் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.