மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன்.
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.
‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் கூறியிருந்த நிலையில், அதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திர எடியூரப்பாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இப்போது கண்டனம் தெரிவித்து உள்ளார். கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை.வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
சில அமைப்புகள் தக்லைப் படத்தை கர்நாடகத்தில் திரையிடமாட்டோம் என்றும் மிரட்டி உள்ளன. தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.