முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து மரியாதை செய்தனர். சென்னையிலும் இன்று அமைதி்ப்பேரணி நடந்தது. பல்வேறு இடங்களில் திமுகவினர் அன்னதானம் வழங்கினர்.
சென்னை , ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினர். இந்த பேரணியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் , துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே. என். நேரு, திமுக எம்பி கனிமொழி உள்பட திமுக மூத்த தலைவர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , முதலாவதாக கட்சியினுடைய தலைமை நிர்வாகிகளும், அவர்களை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக தொண்டர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலைஞர் உருவப்படங்களுடன் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
அவர்கள் கலைஞர் நினைவிடத்தை அடைந்ததும், அங்கு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் மலர்களை தூவினார். நினைவுநாளையொட்டி கலைஞர் நினைவிடம் இன்று மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வரை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் அனைவரும் கலைஞர் நினைவிடத்தை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அமைதி பேரணி நடைபெற்ற வழி நெடுகிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் , மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மேடைகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அமைதி பேரணிக்காக சிவானந்த சாலை முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுபோல பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவினர்அமைதிப்பேரணி நடத்தினர். திருவாரூரில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் அமைதிப்பேரணி நடந்தது.