கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சிபிஐ விசாரணையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, போனில் அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் ஆகியோருக்கும் அதே தேதியில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.மேலும், தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி முதல் வாரத்தில் அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை கூட்ட ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தோல்வி குறித்து முக்கிய தகவல்களை வெளிக்கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சம்மன்கள் தவெகவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் இத்தகைய சட்ட சிக்கல் கட்சியின் அரசியல் பயணத்தை பாதிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

