கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் டெல்லி சென்று விசாரணையில் ஆஜராக உள்ளனர்.
கரூர் சம்பவம் கூட்டத்தில் பங்கேற்க வந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் பலர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். இது கட்சியின் ஏற்பாடுகள் மற்றும் அனுமதி தொடர்பான கேள்விகளை எழுப்பியது. உயிரிழப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனால் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த சம்மன் தவெகவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், இத்தகைய சட்ட சிக்கல் கட்சியின் அரசியல் பயணத்தை பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சம்மன் பெற்ற நிர்வாகிகள் விசாரணையில் ஆஜராகி தங்கள் பக்க விளக்கத்தை அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வழக்கு தொடர்பான மேலும் விவரங்கள் விசாரணை முடிந்த பிறகே தெரியவரும்.

