Skip to content

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தலைமுடியை பின்னலிடாமல் வந்ததால் மாணவியை பேராசிரியர் ஜாஹிர் ஹீசைன் என்பவர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பேராசிரியர் தன்னை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் ரீதியாக திட்டியதாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி இன்று புகார் அளித்துள்ளார். மாணவிக்கு ஆதரவாக சக மாணவ, மாணவிகள் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட பேராசிரியர் மாணவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அனைவரும் கல்லூரிக்கு திரும்பவில்லை என்றால் மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு பேராசிரியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி முதல்வர் சுதா மற்றும் தான்தோன்றி மலை காவல் ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியின் புகார் மீது நாளை பிற்பகலுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் கல்லூரி வாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

அதேபோல், இந்த பிரச்சனை சம்பந்தமாக மாணவி நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்றதாலும், கல்லூரியில் செயல்படும் உள்ளக புகார் குழுவிற்கு (CII) தெரிவிக்காததால் தனது பார்வைக்கு வரவில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை நடத்தி விட்டு விளக்கம் அளிப்பதாக கல்லூரி முதல்வர் சுதா தெரிவித்தார்.

error: Content is protected !!