கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாகவும், அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவைச் சேர்ந்தவர் நேற்று வருகை தந்தார்.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் குழுவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித் சரண் மற்றும் கர்னல் வி.மிஸ்ரா ஆகியோரும் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்துள்ளனர்.
கரூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த கண்காணிப்பு குழுவினரை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும், இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை ஆய்வு செய்ய உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் சேர்ந்தவர்கள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக மனுக்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

