கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள ஒரு அடகுக் கடைக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சங்கிலியைத் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில், பாக்கெட்டில் இருந்த ஓட்டை வழியாகச் சங்கிலி எதிர்பாராதவிதமாகச் சாலையில் தவறி விழுந்துள்ளது.
கடைக்குச் சென்ற பிறகு சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், உடனடியாக ‘100’ என்ற அவசர எண்ணிற்குத் தகவல் அளித்தார். கரூர் நகர காவல் நிலைய போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, சங்கிலி காணாமல் போன பாதையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சாலையில் கிடந்த சங்கிலியை மற்றொரு முதியவர் எடுத்துச் சென்றது கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த நபரை விரைந்து அடையாளம் கண்ட போலீசார், அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பத்திரமாக மீட்டனர். புகார் அளித்த இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே, பாலகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து உதவி ஆய்வாளர் நாகராஜ் சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் இந்த மின்னல் வேக நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

