கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி தனது மனைவியுடன் மூன்று சக்கர வாகனத்தில் வந்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,
மாற்றுத்திறனாளி நான் என் மனைவியுடன் எங்களுடைய பூர்வீக இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். எனது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் எனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நினங்களுக்கு முன்னர் எனது உறவினர்கள் எனது வீட்டின் கூரையை பிய்த்து எறித்து விட்டனர். இது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கூரை இல்லாத வீட்டில் நான் மனைவியுடன் குடியிருந்து வருகிறேன். எனவே, எனது வீட்டு கூரையை பிய்த்து எரிந்த உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். குறிப்பாக புகார் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்விலி கிழங்கை சாப்பிட்டு என் உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேற வழி இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார் இதனால் காவல்துறையினர் அவர் வைத்திருந்த கண்விலி கிழங்கை எடுத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.