Skip to content

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த கடை வாசலில் படுத்து உறங்குவது போல, அவர் அணிந்திருந்த பையில் வைத்திருந்த மர்ம பொருளை வைத்து, ஒரு பக்க பூட்டை திறந்துள்ளார்.

கடையின் ஷட்டரை லேசாக திறந்த அந்த நபர் பாம்பு போல மெதுவாக ஊர்ந்த படியே உள்ளே சென்றுள்ளார். கடைக்குள் சென்ற அந்த நபர் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது, சில்லறை காசுகளும், சில ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்துள்ளன. உள்ளே எதிர்பார்த்த அளவு பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது செல்போனில் இருக்கும் டார்ச் மூலம் கடையை நோட்டமிட்டு, சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஷட்டர் வழியாக ஊர்ந்தபடியே அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

கரூர் மாநகரில் பேக்கரி கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையன் ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீடியோ வெளியான நிலையில், அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கரூர் மாவட்ட காவல்துறை ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!