Skip to content

கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜய்யின் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நிகழ்வில் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு தடை வேண்டும் என்று தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
சம்பவம் நடந்த கரூர் மாவட்டத்தில் சிபிஐ குழு முகாமிட்டு, அங்கு இருந்த சாட்சிகள், அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற கட்சியினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் விரிவான வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பல்வேறு தளங்களில் இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையில், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறயிருந்த நிலையில்  கரூரில் தனியார் மண்டபம் பார்க்கப்பட்டதும், அந்த திட்டம் கைகூடவில்லை என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருப்பது விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தது.

இந்நிலையில்   விஜய்யின் தவெக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் இருந்து தனியார் வாகனத்தில் சென்னைக்கு அழைத்து வந்து இன்று மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்.

சிபிஐ விசாரணை தீவிரமடையும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 2 பேரும் வரும் நாளை  கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்புக்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை ஒட்டி, சமூக வலைதளங்களிலும் பல்வேறு விவாதங்கள் வெடித்துள்ளன. சிலர் இதை அரசியல் நுணுக்கமான நடவடிக்கையாக விமர்சிக்கின்றனர். கரூரில் நடந்த துயரச் சம்பவத்ததால், எதிர்காலத்தில் இத்தகைய கூட்டங்களில் பாதுகாப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!