Skip to content

நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். இதில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவில், இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 2-ம் தேதி கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்து சென்றனர்.

இந்த ஆண்டு யாத்திரை துவங்கியது முதலே, உத்தரகாண்டில் அதிக கனமழை, நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் குறுக்கிட்டன.  இதனால், பக்தர்களின் பாதுகாப்புக்காக யாத்திரை அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வானிலை சீரான நிலையில், செப்.10க்கு பின் சார்தாம் யாத்திரை மெல்ல வேகமெடுத்தது.

இந்தநிலையில், குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோவில் நாளை முதல் மூடப்படுகிறது. கோவில் நடை மூடப்படுவதையொட்டி, கேதார்நாத் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கேதார்நாத் கோவிலின் நுழைவாயில்கள் நாளை காலை 8.30 மணிக்கு மூடப்படும் என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கங்கோத்ரி கோவில் நடை, வரும் அக்.22ம் தேதியும், பத்ரிநாத் கோவில் நடை, வரும் நவ.25ம் தேதியும் அடைக்கப்படும். அதன்பின், இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை நிறைவடையும்.

error: Content is protected !!