Skip to content

கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்றபோது சபரிமலையில் இளம்பெண்கள் செல்ல தடை விதிக்க தேவையில்லை என்று கேரள அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுதான் அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது மார்ச் 14ம் தேதிக்குள் இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான 3 பேர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

அப்போது சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இளம்பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. ஆனால் இதை மீறி கேரள அரசின் ஒத்துழைப்புடன் 2 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கேரளா முழுவதும் வன்முறை வெடித்தது.இதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்தது. தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தான் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு முன்னர் எடுத்த நிலைப்பாட்டை மாற்றி பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!