மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை ரினி கூறியதாவது:
சமூக வலைதளம் வாயிலாக, கேரளாவின் பிரதான கட்சியைச் சேர்ந்த இளம் அரசியல் பிரமுகர் அறிமுகமானார்; சில நாட்களிலேயே எனக்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு தவறான நோக்கத்துடன் அழைத்தார்.
கோபமடைந்த நான், அவரது கட்சி மேலிடத்தில் கூறுவேன் என கூறியபோது, ‘யாரிடம் சொன்னாலும் கவலை இல்லை. எந்த அரசியல்வாதிக்காவது, இது போன்ற புகாரில் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறதா’ என என்னிடம் ஏளனமாக கேட்டார். அந்த கட்சியின் தலைமையிடம் இது பற்றி தெரிவித்தும் பலன் இல்லை.அதே நேரத்தில், இந்த சம்பவத்துக்கு பின் தான், அவருக்கு கட்சி பதவிகள் கிடைத்தன; எம்.எல்.ஏ., ஆனார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகையின் புகார் பற்றி விசாரித்தபோது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அந்த அரசியல்வாதி கேரள மாநிலம் பாலக்காடு எம்.எல்.ஏவும், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் தான் அவர் என தெரியவந்தது. கடந்த ஆண்டு நடந்த பாலக்காடு இடைத்தேர்தலில் வென்று அவர் எம்எல்ஏ ஆனார். கட்சி மேலிடம் இது குறித்து விசாரிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது ராகுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை மட்டும் ராஜினாமடா செய்து உள்ளார். எம்.எல்.ஏவாக தொடர்கிறார்.
ராகுல் இதற்கு முன் ஒரு பெண் பத்திரிகையாளரிடமும் இதுபோல நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.