கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மனநல மருத்துவர் கவிதா லட்சுமணன், ஷாஜு, கிரிராம் உள்ளிட்டோர் காப்பகத்தின் உரிமையாளர்களாக உள்ளனர். இங்கு மனநலம் குன்றிய மற்றும் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது 22 வயதான மகன் வருண்காந்த் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இங்கு சேர்க்கப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் உள்ளே சென்று காப்பகத்தில் உள்ளவர்களை சந்திக்கக் கூடாது என காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 15ம் தேதி காப்பகத்தில் இருந்த ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ரவிக்குமாரின் மகன் வருண்காந்த் காணாமல் போனதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சென்ற ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்களிடம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு காப்பகத்தில் உள்ள சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் அங்கு வைத்து வருணை காணவில்லை என்றும் காப்பக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரவிக்குமார், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காணாமல் போன வருணை தேடியபோது அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. குறிப்பாக காப்பக நிர்வாகிகள் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட வருண் காணாமல் போனதாக கூறப்பட்ட 15ம் தேதிக்கு முன்பே காணாமல் போனதாகவும், அவரை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்ததாகவும் அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் கட்டில் ஆகியவற்றை வேறு அறைக்கு மாற்றியதாகவும் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் தனது உறவினரான நாகராஜிடம் இது குறித்து கூறவே ஏற்கனவே நாகராஜின் உறவினர் ஒருவரின் மகன் அதே காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட வந்த சூழலில் அவரும் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது இதேபோன்று பல மாணவர்களையும் காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்ததாகவும் காணாமல் போன வருணை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதில் கை, கால் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரவிக்குமார் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரமாக்கினர்.
இத்தகவல் அறிந்ததும் காப்பக உரிமையாளர்களான கவிதா லட்சுமணன், ஷாஜூ, கிரி ராம் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் ஈரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்த காப்பக உரிமையாளர்களில் ஒருவரான கிரிராஜ் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மனநலம் குன்றிய வருண்காந்த்தை அடித்து சித்திரவதை செய்ததில் அவர் இறந்து விட்டதாகவும் அவரை கேரள எல்லையான நடுப்புணி அருகே உள்ள எஸ் நாகூர் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான மேட்டங்காட்டில் புதைத்து விட்டதாகவும் தெரியவந்தது.
இதனை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில், தாசில்தார் வாசுதேவன், ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமான குழிகளை தோண்டி பார்க்கப்பட்டது. இதில் ஒரு குழியில் போர்வையால் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் சுற்றப்பட்டு வருணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பிரேதத்தை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு வருணின் பிரேதம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
காப்பக உரிமையாளர்களில் ஒருவரான கிரிராஜ் மற்றும் மேற்பார்வையாளர் நித்தீஸ், பாதுகாவலர் கூடலூர் சதீஸ், திருவண்ணாமலையை சேர்ந்த ஷீலா ஆகியோரை கைது செய்த போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காப்பக உரிமையாளர்களான கவிதா அவரது கணவர் லட்சுமணன் அவர்களது இரு மகள்கள் மற்றும் ஷாஜூ ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக சுற்றித்திரிந்து திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் நோக்கி செல்லும் வழியில் இவர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
