பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த ரூபினிபிரியா மற்றும் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா ஆகிய இரு பெண்களும் கிராம கிராமாக சென்று இரண்டு லட்சம் முதல் 10லட்சம் வரை மானியத்துடன் தொழில் கடன் பெற்று தருவதாக கூறி பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி, கெடிமேடு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களிடம் தலா 7,500 ரூபாய் முதல் 31 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் பெற்றுள்ளனர்.
இதில் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 7மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தொழில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது முறையாக பதிலளிக்ககாதால்
பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். இந்நிலையில் புகார் பெற காவல்துறையினர் மறுத்ததாக கூறி முற்றுகையிட்ட மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில் கடன் வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய பெண்களில் மல்லிகா என்பவரை பிடித்து வந்து ஒப்படைத்த கிராம மக்கள் இதில் முக்கியமாக தொடர்புடைய ரூபினி பிரியாவை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுக்குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
