கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் மீட்பு பணியின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தான செயல் விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சிகளானது வழங்கப்பட்டு வருகிறது. நதிக்கரைகள் குளங்கள் உள்ள பகுதிகளில் இந்த ஒத்திகை பொது மக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உபகரணங்களின் தேவைகள் குறித்தும் தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் சில உபகரணங்களில் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.