கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம். வெள்ளி விழா காணும் இந்த ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் புணரமைக்கப்பட்டு புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை நிறுவனர் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

மஹா கணபதி ஹோமத்துடன் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதற்கால வேல்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது.
இன்று 108 மூலிகைகளைக் கொண்டு நான்காம் கால வேள்வி நடைபெற்று புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்கள் மற்றும் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த சாதுக்களுக்கு ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை நிறுவனர் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை வழங்கி வரவேற்றார். இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

