தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டில் இதே தினம் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை வகுப்பறையில் போட்டு பூட்டி விட்டு ஆசிரியைகள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றபோது சத்துணவு கூடத்தில் இருந்து பரவிய தீயில் கருகி 94 குழந்தைகள் பலியானார்கள். 19 குழந்தைகள் படுகாயங்களுடன் தப்பினர்.
இந்த கோர தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் , இனிப்புகள் படைத்து அஞ்சலி செலுத்தினர். பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக பிடித்த உணவுப் பொருட்களை படைத்து, மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர். மாலையில் வழக்கம்போல கும்பகோணம் மகாமக குளத்த்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.