எலுமிச்சை பழ வியாபாரியின் மண்டை உடைப்பு
திருச்சி வடக்கு தாராநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (39 ) .இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பெரிய கடை வீதி அருகே உள்ள டாஸ்மாக்கில் தன் நண்பனுடன் மது அருந்தி கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர் அவர் தர மறுக்கவே அந்த இரண்டு பேரும் பிரகாஷ் மற்றும் அவரது நண்பன் செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரகாஷ் மற்றும் செல்வம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் ராஜி மற்றும் சந்துரு ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்த பயணி சாவு..
கிருஷ்ணகிரி மாவட்டம் பயணிகள் பங்களா சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (58). இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சரவணன் புதுக்கோட்டை செல்வதற்காக திருச்சி வந்தார் .அப்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் திடீரென மூச்சு திணறி மயங்கினார் .அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார் .இதுகுறித்து எடமலைப்பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கணவனுடன் தகராறு: திருச்சியில் பெண் தற்கொலை
திருச்சி பொன்மலை மலையடிவாரம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (46). இவரது மனைவி வெள்ளம்மாள் ( 35 ). ராஜசேகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளம்மாள் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி கூனிபஜாரில் கழிவறையில் மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
திருச்சி கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் மரியம் ( 59 ) இவர் வீட்டில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்சார ஒயரை தொட்டுள்ளார் .இதனால் மின்சாரம் பயந்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருச்சி செந்தண்ணீர்புரம் திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (47).இவர் செந்தண்ணீர்புரம் சென்னை – மதுரை பைபாஸ் அருகே மைய தடுப்பு கட்டை மீது நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் தாமோதரன் மீது மோதியது. இதில் தாமோதரன் தலையில் பலத்த காயமடைந்தார். மேலும் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.