கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை பறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேரூர் அடுத்த தித்திபாளையம் பகுதியில் உள்ள அய்யாசாமி கோவில் செல்லும் வழியில் சிறுத்தை ஒன்று சாலையில் நின்று அங்கும், இங்கும் பார்த்து நடந்து செல்கிறது. அதனை அந்த ஆம்னி காரில் சென்ற நபர் காரை நிறுத்தி விட்டு அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தித்திப்பாளையம் அய்யாசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுத்தை நடமாட்டம் என பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த காட்சிகளை வனத்துறையினர் உறுதிப்படுத்தி அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா ? என கண்காணித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உயிர் பறிபோகும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.