கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து சாப்பிட்டு வந்தது இதனை அடுத்து விவசாயிகள் வனத்துறையினருக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று இடங்களில் கூண்டு வைத்து இரவு பகலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாறைப்பதி அருகே பழனிச்சாமி தோட்டத்தில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை சாப்பிட சென்ற சிறுத்தை கூண்டுக்குள் மாட்டிகொண்டது. இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் கூண்டில் அகப்பட்ட சிறுத்தைக்கு வன கால்நடை மருத்துவர் மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டு டாப்சிலிப் அருகே உள்ள யானை குத்தி சோலைப் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக நள்ளிரவு விடப்பட்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் அகப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மீண்டும் ஆனைமலை அடுத்த ஒடைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழிகண்டம் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது பிடிபட்ட அதே நாளில் நள்ளிரவில் பிடித்து சென்றதாகவும் இதனால் தோட்டத்து பகுதியில் இருப்பதற்கு பயமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தாயாத்தாள் தெரிவித்துள்ளார் . இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான சிறுத்தையை நடமாட்டம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

