Skip to content

வீட்டின் உரிமையாளரை கொன்ற வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

வீட்டை காலி செய்யும் விவகாரத்தில் வீட்டின் உரிமையாளரை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அமைந்தகரையில் பூந்தமல்லியை சேர்ந்த பிரபு, கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு வீடு உள்ளது. இந்த வீட்டை கண்ணகி ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். வாடகை வசூலிப்பு, பராமரிப்பு போன்ற பணிகளை கோட்டீஸ்வரன் பார்த்து வந்துள்ளார்.

இந்த வீட்டில் வாடகைக்கு இருந்த கண்ணகி ஆறுமுகத்துக்கும், கோட்டீஸ்வரனுக்கும் இடையே வாகனம் நிறுத்துவது, கூடுதலாக குடிநீர் கேட்பது போன்ற விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யுமாறு கண்ணகி ஆறுமுகத்திடம் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார். இதுகுறித்து தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் கண்ணகி ஆறுமுகம் தெரிவித்ததைடுத்து, கடந்த 2013ம் ஆண்டு மே 31ம் தேதி கண்ணகி ஆறுமுகத்தின் உறவினர்கள், நண்பர்களான சிலம்பரசன் (23), ரஹ்மான் (23), ராஜ் (23) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் வீட்டின் முன்பு படுத்திருந்த கோட்டீஸ்வரனின் தலையில் சிமென்ட் கல்லால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கோட்டீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிலம்பரசன், ரஹ்மான், ராஜ், சிறுவன் உள்பட நான்கு பேர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

சம்பத்தில் தொடர்புடைய ஒருவர் சிறுவன் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மற்ற 3 பேர் மீதான வழக்கு, சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, உறவினரை வீட்டை விட்டு காலி செய்ய கூறியது தொடர்பாக கொலையான கோட்டீஸ்வரனை, கடந்த 2012ல் குற்றவாளிகள் மூவரும் தாக்கி வலது கையை உடைத்துள்ளனர். இதுகுறித்து உயிரிழந்த நபர் அப்போதே போலீசில் புகார் அளித்துள்ளார்.

முன் பகை காரணமாக கோட்டீஸ்வரனை கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!