Skip to content

லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

தகுதி சான்று கட்டண உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு தகுதி சான்று புதிய கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் வாபஸ் பெறப்பட்டது.

தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து, தமிழ்நாட்டில் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென நாமக்கல்லில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் கடந்த 17ம் தேதி மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தனர். இதையடுத்து, ‘மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களை மிகவும் பாதிக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 6.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது’ என மாநில தலைவர் தனராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், FC பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையடுத்து தற்போது, லாரிகளுக்கான உயர்த்தப்பட்ட (FC) கட்டணத்தை 3 மாதம் நிறுத்தி வைத்ததால், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!