கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16 வயது சிறுமி ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வசந்த் குமார், இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வசந்த் குமார் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் பள்ளி சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மாணவி கீழே விழுந்தவுடன், அவர் இறந்துவிட்டதாகக் கருதிய வசந்த் குமார், அதே வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி , உயிருக்குப் போராடிய நிலையில் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் உதவியுடன் பள்ளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு, கழுத்தில் தையல்கள் போடப்பட்டன. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வசந்த் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வுக்காகப் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

