அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள்
தங்களது வீடுகளில் கிரைண்டர் மிக்ஸி பேன் உள்ளிட்ட மின்சார வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டி வந்தனர். எனவே சீரான மின்சாரம் வழங்க கோரி பலமுறை மின்சாரத்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர். அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் உடனடியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்சாரத்தை வழங்க கோரி கோவிலூர் கிராம மக்கள் இன்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கோவிலூர் கிராமத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தை மறத்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.