தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் ஏசி சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தாண்டி மேலவஸ்தா சாவடி ரவுண்டானா அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த ஏசி சொகுசு பேருந்து ரவுண்டானா சென்டர் மீடியன் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பூங்கா தடுப்பு கம்பியில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. பேருந்தில் வந்த எந்த பயணிக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் சாலையை அடைத்தது போல் பேருந்து
நின்று விட்டது. இதனால் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தில் மாற்றம் செய்து நெரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தை நகர்த்த முடியாததால் பொதுமக்கள் சேர்ந்து ஓரமாக தள்ளி வைத்தனர். பின்னர் மீட்பு வாகனம் வந்து பேருந்து இழுத்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
