சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நமது கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.