Skip to content

மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார்.

மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகே உள்ள கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுப்புராஜ் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க ஆக்சல் (Axle) துண்டாகி தனியாகக் கழன்று விழுந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இடதுபுறமாகச் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பேருந்து சாய்ந்து கிடந்ததால், மதுரை – திண்டுக்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரானது.

error: Content is protected !!