புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வேங்கைவயல் கிராமத்தில் முகாமிட்டு இது தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மனித கழிவு கலந்த நீரை பயன்படுத்திய 30 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 கோயில்களில் தீண்டாமை கொடுமை உள்ளது. அதுபற்றி விசாரிக்க உத்தரரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் , எஸ்பி மற்றும் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் பிப். 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
