தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்துவதற்காக சிவ பெருமானின் திருவடிகள் பட்டு, பட்டு புண்ணியம் பெற்ற தலம் மதுரை திருத்தலம். இங்கு தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் கருணை பொங்கும் அழகிய புன்னகை நிறைந்த திருமுகத்துடன் காட்சி தந்து, உலக உயிர்களுக்கு எல்லாம் அன்னையாக விளங்கும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருகிறாள். என்ன குறை, கவலையை சொல்லி முறையிட்டாலும் தாயாக வந்து காத்து, கண்ணீரை துடைத்து, அருள் மழையை பொழியக் கூடியவள் மீனாட்சி. மதுரை திருத்தலத்தில் அன்னை மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு தாயாரை வழிபட்ட பிறகே சிவனை வழிபடும் வழக்கம் உள்ளது.
வருடத்தின் அனைத்து நாட்களும், அனைத்து மாதங்களும் திருவிழா நடக்கும் ஒரே கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். மதுரையில் 6 மாதங்கள் மீனாட்சி ஆட்சியும், மீதமுள்ள 6 மாதங்கள் சிவ பெருமானின் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். மதுரையில் வருடம் முழுவதும் திருவிழா நடக்கும் என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். சித்திரை திருவிழாவின் போது ஆண்டுதோறும் அன்னை மீனாட்சிக்கு மதுரையின் அரசியாக பட்டாபிஷேகமும், மறுநாள் சுந்தரேஸ்வரரான சிவ பெருமானுடன் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுவது வழக்கம்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண்பதால் நமக்கு அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட தோஷங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி நிலைக்கும். வீட்டில் மங்களம் பெருகும். அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்., 28ம் தேதி நடைபெறுகிறது. முடிந்தவர்கள் மதுரைக்கு நேரில் சென்று அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் மணக்கோலத்தில் தரிசித்து விட்டு வரலாம்.

