கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைத்து போத்தனூர் ரயில் நிலையத்தின் பயணிகள் முன்பதிவு மையத்தில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது, இம்ரான் ஹொசைன் சேக் (37) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இம்ரான் ஹொசைன் சேக், தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.
அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள 3 நேரடி PRS கவுண்டர் டிக்கெட்டுகள், 5 பூர்த்தி செய்யப்படாத முன்பதிவு படிவங்கள், மற்றும் ஒரு OPPO A59 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது மொபைல் போனில், காலாவதியான பல டிக்கெட்டுகளின் படங்கள் மற்றும் சமீபத்தில் முன்பதிவு செய்து விற்கப்பட்ட 85,065 ரூபாய் மதிப்புள்ள 10 டிக்கெட்டுகளின் படங்கள் இருந்தன.
விசாரணையின் போது, இம்ரான் ஹொசைன் சேக், போத்தனூர், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, மேட்டுப்பாளையம் மற்றும் ஒட்டப்பாலம் ரயில் நிலையங்களில் உள்ள PRS மையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, ஒவ்வொரு பயணிக்கும் 300 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து விற்று வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.