நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்நிலையில் மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு நேற்று குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் 400 கிலோ ஆர்.டி.எஸ். வெடி மருந்துடன் ஊருவியுள்ளதாகவும், அந்த வெடி மருந்துகள் 34 வாகனங்களில் வைக்கப்படுள்ளதாகவும், அது வெடிக்க தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்று மிரட்டல் விடுத்தது அஸ்வினி குமார் ( 51) என்பதும் இவர் ஜோதிடர் என்று தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 79 பகுதியில் வசித்து வருகிறார். அஸ்வினி குமார் தனது நண்பரை போலீசில் சிக்க வைக்க பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளார். அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023ம் ஆண்டு பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
அதன்படி, தனது நண்பரின் செல்போன் கிடைத்த நிலையில் அதில் இருந்து மும்பை போக்குவரத்து போலீசுக்கு வாட்ஸ்- அப் மூலம் பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜோதிடர் அஸ்வினி குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.