Skip to content

அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி

கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில் பெண் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பயணிகள், அந்தப் போதை ஆசாமியைத் தர்ம அடி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

போலீசார் அழைத்துச் சென்ற சில மணி நேரங்களில், அதே நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார். பேருந்தில்

இருந்து இறக்கி விடப்படும் போது காயங்கள் ஏதுமின்றி இருந்தவர், ஆட்சியர் அலுவலகம் வரும் போது எப்படி ? ரத்தக் காயங்களுடன் கிடந்தார் ? அவரைத் தாக்கிய மர்ம நபர்கள் யார் ? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே கோவை அரசுப் பேருந்துகளில் இத்தகைய கசப்பான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன, வடவள்ளியில் பேருந்தில் பயணித்த எலக்ட்ரீசியன் ஒருவரை ‘போதை ஆசாமி’ எனக் கருதி, நெஞ்சுவலி என அவர் கதறியும் கண்டக்டர் மற்றும் டிரைவர் நடுவழியில் இறக்கிவிட்டனர். ஆனால் விசாரணையில் அவருக்கு ரத்த அழுத்தத்தால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சிகிச்சையில் இருந்த அவர் 5 நாட்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோன்று சில நாட்களுக்கு முன்பு லட்சுமி மில் சிக்னல் அருகே பேருந்தை நிறுத்தச் சொல்லி போதை பயணி ஒருவர் கண்டக்டருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இருவரும் சாலையில் கட்டிப்பிடித்து உருண்ட நிலையில், பயணிகள் அவரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் பேருந்துகளில் நடந்து உள்ளது பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாகப் பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டிய பேருந்து ஊழியர்களின் மெத்தனப் போக்கு குறித்துப் புகார் எழுந்து உள்ளது.

error: Content is protected !!