மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா ஆவார். சினேகா நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றதால் ஆட்டோ டிரைவரும், சினேகாவும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.
ம.நீ.ம நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மற்றும் அவரது தோழியுமே, ஆட்டோ ஓட்டுநர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் காவல்துறை விசாரணையில் அம்பலமானது. கைதாகியிருந்த பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு ம.நீ.ம நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மீது 2 பிரிவுகளின் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.