Skip to content

காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

  • by Authour

அடியாராக வந்த  சிவனுக்கு, காரைக்கால் அம்மையார், மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான்  மீண்டும் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி  காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில்  மாங்கனித் திருவிழா  கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம்  விமரிசையாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலையில் பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் (புனிதவதியார்) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  இதில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

பௌர்ணமி தினமான இன்று விழாவின் சிகர நிகழ்வான மாங்கனி இறைத்தல் விழா  நடைபெற்றது.  அதிகாலையில் பிச்சாடனர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9 மணியளவில் பிச்சாடனர் வீதி உலா தொடங்கியது. வீதியின் இருபுறமும் மக்கள் தங்களின் வீடுகளின் மாடி அல்லது உயரமான இடங்களில் நின்று  மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசி வழிபட்டனர். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வார்கள். இந்த மாங்கனி கிடைத்தால்  காரியங்கள்  சித்தி பெறும் என்பது ஐதீகம். எனவே போட்டி போட்டு மாங்கனிகளை  பிடிப்பார்கள்.

அதுபோல நேர்த்திக்கடனாக மாங்கனிகளை இறைப்பார்கள்.   இந்த மாங்கனி திருவிழாவையொட்டி இன்று காரைக்காலில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

 

error: Content is protected !!