Skip to content

அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு விடுத்துள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலோரரங்களில்  உள்ள சதுப்பு நிலக்காடுகள் என சொல்லப்படும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலும் அதிக பரப்பில் உள்ளது.   இதனை மாங்குரோ காடுகள் எனவும் கூறி வருகிறோம். இந்தியாவில் சுமார் 4900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இவற்றில் 66% காடுகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளிலும், குஜராத் காடுகளிலும் உள்ளன.

தமிழ்நாட்டில் அலையாத்தி காடுகள் பரவலாக காணப்படுகின்றன. ஆனாலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன. இதில் கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் 2,800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கண்டல் காடுகள் பகுதியாகும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29713 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன.

ஆறுகள் கடலில் கலக்கக்கூடிய, சேறு கலந்த சதுப்பு நிலங்களில், கடலோர உப்பங்கழி ஆற்று முகத்துவாரங்களில் இந்த அலையாத்தி காடுகள் வளரும் தன்மை கொண்டது. கழுதை முள்ளி, பன்ருத்தி, வெண்கண்டல், கருங்கண்டல், நரி கண்டல், சிறு கண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை சுரபுண்ணை, குட்டை சுரப்புண்ணை, மலட்டு சுரப்புண்ணை, சோ முந்திரி மற்றும் சோனரிசியா எபி டெலா உள்ளிட்ட பல்வேறு வகையான காடுகளை தான் அலையாத்தி காடுகள் அல்லது சதுப்பு நிலக்காடுகள் என அழைக்கின்றோம்.

இப்படிப்பட்ட அலையாத்தி காடுகளினால் மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழலுக்கும், பல்வேறு உயிர்களுக்கும், உயிர்களின் பெருக்கத்திற்கும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களையும், வளங்களையும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்,
* விலங்குகள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் வாழ்வதற்கும், மீன்கள் உற்பத்தியாவதற்கும், பல்லுயிர் பெருக்கங்களுக்கும் மைய வாழ்வாதாரப் பகுதியாக இருக்கின்றன.
* கடல் சீற்றம் ஏற்படும் போது, கடல் கரை மணல் அரிப்பிலிருந்து கடற்கரையை பாதுகாக்கின்றன
* கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன
* காற்றின் வேகத்தையும், புயலையும் கட்டுப்படுத்துகிறது
* 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிலிருந்து பல்வேறு பகுதிகளை பாதுகாத்து வைத்திருக்கிறது.
* மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மையமாக அமைகிறது.

இப்படி எண்ணில் அடங்கா பயன்களை மனிதர்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் அளித்து வருகின்ற மகத்துவம் மிகுந்த அற்புதமான இந்த அலையாத்தி காடுகள், தற்போது அழிந்து வருகின்றது. அலையாத்தி காடுகள் அழிவதற்கு முக்கிய காரணங்கள் மனித செயல்பாடுகளும், இயற்கை சூழல் மாற்றங்களும் ஆகும்.

குறிப்பாக,

* கடலோர பகுதியிலும் ஆற்று முகத்துவார பகுதிகளிலும் இறால் வளர்ப்பு தொழிற்சாலைகளையும், மீன் பண்ணைகளையும் அமைப்பதால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
* நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில் அலையாத்தி காடுகள் அழிக்கபடுகிறது.
* சுற்றுலா மேம்பாட்டுக்காகவும், சுற்றுலா பயணிகளாலும் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுகின்றன.
* கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் காடுகள் அழிகின்றன.
* கனரக தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறுகளிலும், கடலிலும் கலக்க விடுவதால், நீர் மாசுபட்டு அலையாத்தி காடுகள் அழிகின்றன.

இப்படி எல்லாம் பல்வேறு காரணங்களால், மனித குலத்தையும் சுற்றுச்சூழலையும்  பாதுகாக்க கூடிய மதிப்புமிக்க அற்புதமான அலையாத்தி காடுகள் அழிந்து வருவதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு செய்வதற்கு வழி வகுத்து, சிறப்பு கவனம் செலுத்தி, அலையாத்தி காடுகளையும், அதன் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கச் சூழல் மற்றும் அதனை சார்ந்த வாழ்வாதார மையங்களையும் பாதுகாத்து, கடலோர நிலங்களையும், வளங்களையும் பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

error: Content is protected !!