Skip to content

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. எனவே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.

இருப்பினும் தாங்கள் அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியிலேயே தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருவதோடு, மலையிலிருந்து கீழே இறங்க மறுத்து வருகின்றனர். அதே சமயம் தேயிலை தோட்டம் மூடப்பட்டுள்ளதாலும், அந்த பகுதியானது தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும் அங்கு மக்கள் வசிப்பதை அரசு விரும்பவில்லை.
எனவே அவர்களை கீழே இறக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றன. மேலும் இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் மாஞ்சோலை உள்பட தேயிலை தோட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மாஞ்சோலை பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் ஏழு நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்து வெளியேறும்படி பிபிடிசி (பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் – BBTCL) நிறுவனம் நேற்று (ஜன 28) அதிரடியாக நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

அதில், “மாஞ்சோலை, ஊத்து பகுதிகள் அடங்கிய நிலங்களை நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே 08.05.2025 அன்று தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளது. அந்த நிலங்களில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்புகள், பங்களாக்கள் மற்றும் பிற கட்டிடங்கள் அடங்கிய நிலங்களை 31.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் சூழ்நிலை காரணமாக குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நிலங்களை ஒப்படைக்க முடியவில்லை.

மேலும் அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போது கட்டடங்கள் அடங்கிய நிலங்களை அரசிடம் ஒப்படைக்கும் பணியை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எனவே நிலவரங்களை கருத்தில்கொண்டு குடியிருப்புகள் உள்பட கட்டிடங்களில் உடமைகளை வைத்திருக்கும் தொழிலாளர்கள் இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஏழு தினங்களுக்குள் அவற்றை அகற்றிக்கொண்டு அங்கிருந்து நிரந்தரமாக காலி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!