சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். சரணடைபவர்கள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பயனாகவும் அரசின் முயற்சிகளாலும் நக்சலைட்டுகளும், மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை கைவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கொண்டகவான் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்டு பெண் தளபதி கீதா என்கிற கமலி சலம் (40) ஆயுதங்களை கைவிட்டு இன்று போலீசில் சரணடைந்தார். சரணடைந்த மாவோயிஸ்டு தளபதி கீதாவின் தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.