மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. சுவாமி சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில்
இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோ-பூஜை நடத்தப்பட்டு, காலை 4 மணிக்கு மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால்
மகா அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், காலை 5 மணி முதல் 7 மணி வரை உற்சவர் அபிஷேக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பால் குடம் மூலம் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார். அவருடன் பக்தர்களும் அரோகரா… அரோகரா… என பக்தி முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.