Skip to content

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரெனத் தீப்பிடித்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனக் குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சியளித்ததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீசார், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துப் போராட்டத்தைத் தொடங்கினர். தீயின் வேகம் குறையாததால் சுமார் 4 மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகே தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

யாராவது சிகரெட் துண்டுகளை வீசிச் சென்றதால் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!