மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் மற்றும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் இடையிலான கதவணை திட்டம் சிறு சிறு பணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணியிட மாற்றங்கள் மூலம் வேறு இடங்களுக்கு சென்றுள்ளதால் உடனடியாக வேறு மருத்துவர்களை பணி நியமனம் செய்ய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். நேற்று பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளின் நஷ்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத்தரும் நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 70 சதவீத நிறைவடைந்துள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் எஞ்சிய பணிகள் முடிக்கப்படும் என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என்றும் எங்காவது பனை மரங்கள் வெட்டப்பட்டது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
