மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி சீல் வைத்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 1200க்கும் கூடுதலான வழக்குகளை பதிவு செய்திருக்கும் சுந்தரேசன் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறைகளிலும் அடைத்துள்ளார். இந்நிலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயரதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையையும் மீறி மது வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் அதற்கு பழிவாங்கும் வகையில் தான் அவர் மீது இத்தகைய பழிவாங்கல்களை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர் அதிகாரிகள் மீது பல்வேறு புகார் தெரிவித்த சுந்தரேசன், கார் வழங்க மறுத்ததாக புகார் அளித்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கூறி இருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.